திங்கள், 13 டிசம்பர், 2010

அறியாமையா அல்லது அறிந்துக்கொள்ளவிருப்பமின்மையா?!


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில் "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்''  அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  இதற்காக அயல்வாழ் தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்!சராசரி இந்திய மக்களுக்கு கிடைக்காத சில சேவைகளை கேரள அரசு தங்களுடைய அயல்வாழ் மலையாள மக்களுக்கு புரிகின்றனர். வழக்கம் போல, பெயரளவில் இன்றி, திறன்பட இயங்கும் தனிவாரியமாக செயல்படின் அயல்வாழ் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாவர். பொதுவாக, வளைகுடாவில் வாழும் இந்தியர்களுக்கு வருடமொருமுறை ஒருமாதம் தான் விடுமுறை கிடைக்கும். இங்கு சொந்தமாக மகிழ்வுந்து வைத்துள்ளவர்கள் நம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் கூட பெற இயலாத நிலையினில் சட்ட விதிமுறைகள் உள்ளன. இந்தியாவினிலேயே கேரளாவினில் மட்டும் தான் வளைகுடா ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் அதனை அதிகாரபூர்வ அரபி-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களிடம் மொழியாக்கம் செய்து அதன் வாயிலாக விரைவினில் இந்திய வாகன ஓட்டுரிமம் பெறுகின்றனர். இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் மிகவும் உதவிகரமாக இருக்கும். 

இந்திய அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ வளைகுடா நாடுகளுக்கு வரும்போது பாதிப்பிற்குள் இருக்கும் தொழிலாள சமூகத்தினரை நேரடியாகச் சந்திப்பதில்லை.  நட்சத்திர விடுதிகளிலோ அல்லது தனி அரங்குகளிலோ வருகை தந்து உயர்நிலையிலுள்ளவர்களிடம் மட்டுமே தொடர்புக் கொண்டு சென்றுவிடுகின்றனர். பெரும்பாலான இந்தியர்களுக்கு இவர்கள் வருகைதருவது கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்று நிகழ்வது ஆட்சியாளர்களின் அறியாமையா அல்லது அறிந்துக்கொள்ளவிருப்பமின்மையா!?!? இது ஆளும்வர்க்கத்தினருக்குத் தான் வெளிச்சம்!

சேவை மனப்பான்மையுள்ள நம்மவர்கள் தன்னார்வத்துடன் தனித்தனி அமைப்புகளை உருவாக்கி அரசு இயந்திரங்கள் வாயிலாகவோ அல்லது தனித்தோ இவர்களுக்கு தங்களால் இயன்ற தொண்டுகளை ஆற்றிக்கொண்டிருப்பது தான் சற்று ஆறுதல் தரும் விஷயம்.  எழுதப் படிக்கத்தெரியாத, படித்தசிலருக்கும் ஆங்கில அறிவு இல்லாத உழைக்கும் வர்க்கத்தினரை நேரடியாக அயலகத்தில் உள்ள அரசு இயந்திரங்கள் கருணை உள்ளத்துடன் தொடர்புக்கொண்டு அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ள விருப்பமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தாரில் அரசு இயந்திரங்களின் மெத்தனப்போக்கினால் உயிரிழந்த துர்சம்பவம் போல மீண்டும் நிகழ வருங்காலத்தில் வாய்ப்பளிக்கக் கூடாது.

கடுமையான விவாதங்களுக்கு நம் தமிழக முதல்வரின்  சில செயல்கள் அமைந்தாலும் தமிழகத்தின் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும், சாதனைகளுக்கும் முன்னோடியாய் இருக்கின்றார் என்பதனை மறுத்திட இயலாது.  அவரால் அமைய இருக்கும் "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்''  ' 108 அவசர ஊர்தி, இலவச மருத்துவ காப்பீடு திட்டம்' போல வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள்!
Download As PDF

1 கருத்து:

sethuraman சொன்னது…

தமிழக அரசுக்கு நன்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணிக்கும் நன்றி, கடந்த அக்டோபர் மாதம் தமிழர் தலைவர் அய்யா வீரமணி வளைகுடா நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்தபோது துபாய் வாழும் தமிழர்கள் அய்யாவிடம் கோரிக்கை வெளிநாடுகள் வாழும் தமிழர் நலவாரியம் அமைக்கப்படவேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்கள் அதனை இவ்வளவு விரைவாக தமிழக முதல்வர் கலைஞரிடம் எடுத்து சொல்லி நலவாரியம் அமைக்க உதவிய தமிழர் தலைவர் வீரமணி போன்ற தன்னலம் பாரத தமிழர் நலன் காக்கின்ற தலைவர் வீரமணி பல்லாண்டுகள் வாழ விரும்பும் துபாய் தமிழர்கள்.