வியாழன், 22 டிசம்பர், 2011

அவசியம் தெரிஞ்சுக்கோங்க - சவூதியில் பணிபுரிய விரும்பறவங்க...”அரையணா சம்பளம்ன்னாலும் அரசாங்க உத்யோகத்துல இருக்கறவனுக்கு பெண்ணைக்கொடு!” என்கின்ற முந்தைய நிலை மாறி ”என் பெண்ணை ஃபாரின் மாப்பிளைக்குத் தான் கொடுக்கணும்ன்னு இருக்கேன்” என்று கூறுமளவிற்கு ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை பெருகிவிட்டனர் என்பது இன்றைய யதார்த்தம். பெண் தேடும் படலத்திற்கு என்றிராவிட்டாலும் பொதுவாக “வெளிநாட்டில் வேலைசெய்வது” என்பது நம்மில் பலருக்கு ஒருவித கனவு இருக்கத்தான் செய்கின்றது.  ”திரைகடலோடி திரவியம் தேடு!” என்று கூறிய நம் மூதாதையர்களின் மரபணுக்களின் வசியம் தான் இக்கனவா என்பதை கண்டறிவது இப்பதிவின் நோக்கமல்ல.. 
 நாம் எந்தவொரு பணியையும் துவக்குவதற்கு அதன் தன்மையை உணர்தல் அவசியம்.  இந்தியாவினை போலவே அனைத்து வெளிநாட்டிலும் தொழிலாளர் சட்டங்கள், சமூக நடைமுறைகள் இருக்கும் என்று எண்ணுவது மடமை. ஆதலால், நாம் எந்தவொரு நாட்டிற்கு செல்ல விழைகின்றோமோ, அங்குள்ளோரிடம் கருத்துக் கேட்பது மிகவும் நல்லது.  நாம் செல்லவிருக்கும் நாட்டின் தூதரகங்கள் வாயிலாக அறிவுரைப் பெற்றுவிட்டால், அங்கு கிடைக்கும் பணியும் மற்றுமுள்ள சூழலும் நமக்கு பொருந்துமா என்பதினை முன்கூட்டியே அறிந்திடலாம். அதன் மூலம் வருங்காலத்தில் தேவையற்ற சிக்கலில் சிக்காமல் மகிழ்வுடன் வாழ்வை தொடரலாம்.

சவூதி அரேபியாவிலுள்ள ஜெத்தா மாநகர அயலக தூதரகத்தின், சவூதியில் பணிபுரிய விழையும் அயல்நாட்டு மக்களுக்கான அறிவுரையை, சென்னையை சேர்ந்த திரு. ஜெயக்குமார் மொழிபெயர்த்துள்ளார். அதனை எனக்கு அனுப்பிவைத்த என் நெருங்கிய நண்பர் திரு. ஜோசப் செல்வன் அவர்களுக்கு நன்றியை செலுத்தி தங்களுடன் பகிர்கின்றேன். 

Download As PDF

புதன், 7 டிசம்பர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-18

அ.தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் பாலாறு தேனாறு ஓடவிருப்பதாகவும், தடையில்லா மின்சாரமும் குடிநீரும் கிடைத்துவிடும் எனும் மூடநம்பிக்கையும், தொழிற்துறையும், கல்வியும் வளர்ந்துவிடும் எனும் எதிர்பார்ப்பும்…. புதிதாக வாக்களித்த இளைய தலைமுறையினர்க்கோ அல்லது ஓட்டு போடும் வயதிலிருந்திருந்தும் முந்தைய ஜெ.வின் ஆட்சியினை நினைவுக் கூற இயலாதவர்களுக்கும் வேண்டுமானால் இருந்திருக்கலாம்! விலைவாசி உயர்வு, பஸ்கட்டண உயர்வு, விரைவில் மின்கட்டண உயர்வு.. போன்றவை பேரதிர்ச்சியினையும் தந்திருக்கலாம்!!  ஆனால் அன்றாட அரசியலை உற்றுநோக்கும் அரசியல் ஆய்வகர்களுக்கு மட்டுமல்ல, ஜெ.வின் முந்தைய ஆட்சியில் பொருளாதார ரீதியில் தனியாக குடித்தனம் செய்த ஜாபக மறதியில்லாத அனைத்து குடிமகன்களும் இந்த ஆப்பினை... அதாங்க அபார உயர்வினை உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்பு வரும் என்பதை எதிர்பார்த்தே இருந்திருப்பர்!

 ஜெ.வின் சிறப்பு என்னவெனில்…. மற்ற ஆட்சியாளர்களை போல ஒவ்வொரு பொருளின் விலையும் ஒவ்வொரு முறையாக ஏற்றி பல முறை அதிருப்தியடைவதை விட, ஒரேயடியாக அனைத்தையும் ஏற்றி ஒரேயொரு முறை மட்டும் அதிருப்தியினை திருப்தியுடன் சம்பாதித்துக் கொள்பவர்.  மறதி மன்னர்களாகிய நாம் சில நாட்கள் கூவிக் கொண்டு பின்னர் அவரவர் பிழைப்பினைக் காண்பதிலேயே மும்முரமடைவர். வாங்கும் திறன் தமிழக மக்களுக்கு அதிகரித்துள்ளதால் இத்தகைய உயர்வுகள் அவர்களை பாதிக்காது என அவரோ அவரது அல்லக்கை ஊடகங்களோ திரித்தும் கூறும். அது உண்மையெனில், வாங்கும் திறன் வாய்ந்த மக்களுக்கு இலவச பிச்சைகள் இனி எதற்கு? 

இவரது சாணக்கியத்தனத்தினை, முன்பு ஆண்டவர்களை முடக்குவது எப்படி என்பதற்கே முழு நேரமும் மூளையை செலவிட்டு விரயமாக்காமல், சாமான்ய மக்களின் வாழ்வினை பாதிக்காத வகையில் ஆட்சி நடத்திக் காண்பிக்கட்டும்!  நாடும் மகிழும்; நாமும் மகிழ்வோம்!!  வாங்க நாம கார்ட்டூன்களை பார்க்க போகலாமுங்க. குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க!!


சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த விகடன், தினமணி, துக்ளக்... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

Download As PDF

செவ்வாய், 15 நவம்பர், 2011

”காஞ்சி ஜெயேந்திரரையும் காவுகேட்குமா அல்லது காக்குமா” இந்த தினமலரின் கட்டுரை!?சமீப கால தினமலரின் நடவடிக்கைகளைக் காணும் போது  அப்பத்திரிக்கையின் உயர்மட்டக் குழுவில் உள்ளவர்கள் ஏதேனும் மனநோயில் சிக்கி தவிக்கின்றனரா என்கின்ற ஐயம் எழுகின்றது. தமிழ் மொழியையும், தமிழர் இனத்தையும் தமிழுலகில் இருந்துக் கொண்டே தமிழில் இயங்கும் ’தினமலர்’, தன் பத்திரிக்கை வாயிலாக தமிழையும், தமிழர்களின் உணர்வுகளையும் அசிங்கப்படுத்துவதை தான் சகிக்க இயலவில்லை. இவர்கள் எது கூறினாலும் சரி என்கின்ற வசியப்பட்ட வாசகர் கூட்டமும் கீழ்காணும் அவர்களின் கட்டுரைக் கண்டு பலர் மனம் வெதும்பி நிற்கின்றனர்.  பின்னூட்டங்களில் சில கட்டுரையின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ளன.

விவரம் புரியாத சிறுவயதினில் அதில் வரும் வாராந்திர, சினிமா, கல்வி  செய்திகள் எனை ஈர்த்தது. இன்றும் கணினி மலர், அவர்களின் கார்ட்டூன்கள் (ஒருபக்க சார்பாக இருப்பினும் )சில எனை ஈர்ப்பது உண்டு.  அரசியலுக்கு அப்பாற்பட்ட சில செய்திகள் வாசகர்கள் மனதில் எளிதில் தைக்கும் படி எளிமையான கவின்மிகு வடிவில் தாங்கி வருகின்றன என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.   ஆனால் சமூகம்,  அரசியல் என்று வந்துவிட்டால் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி பணி புரிவதை தான் வெறுக்கின்றோம்!

கீழ்காணும் தினமலரின் சிறப்புக் கட்டுரையைக் காணும்போது அவர்களின் வன்மம் கொழுந்து விட்டு எரிவதை நன்றாகவே காணலாம்.  ’பிள்ளையார் பிடிக்க குரங்காகிப் போன கதை’யாக தமிழுணர்வாளர்கள், பொதுமக்களிடமிருந்து மட்டுமல்ல அவர்களின் நெருங்கிய வாசகர் வட்டத்திற்குள்ளிருந்தே  கடும் விமர்சனத்திற்கும் தற்போது ஆளாகி உள்ளது.

தமக்கு எதிரான சிந்தனைக் கொண்ட தமிழக அரசியற்தலைவர்களை சாடுவதாக நினைத்துக் கொண்டு வஞ்சகப் புகழ்ச்சியாக ’கோவிந்தசாமி’ என்கின்ற குற்றவாளியை ஆதரிப்பது போல எழுதி

  • விருத்தாசல நகர மக்கள்
  • தாழ்த்தப்படுத்தப்பட்ட சமூகத்தினர்
  • மாற்றுத்திறனாளிகள்
  • தமிழர் - மலையாளி
  • தமிழகம் - கேரளம்
  • இந்திய இறையாண்மை
  • தமிழக அரசியல்வாதிகள்

என பலவாறாக கூறுபோட்டு  பாகுபடுத்தி இவற்றினை கேவலப்படுத்தியுள்ளனர். ஆனால் தப்பி தவறி கூட ’கோவிந்தசாமி ஒரு இந்து’ என்று குறிப்பிடவில்லை.  இவர்கள் மதத்தை நேசித்த அளவிற்கு மனிதத்தை நேசிக்கவில்லை என்பதே உண்மை.   தமிழை ஆதரிப்பதோ, சுற்றுசூழலை கருத்தில் கொள்வதோ, சமூக நீதிக்கு குரல் கொடுப்பதோ கூடவே கூடாது என்பது போல் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக சில ஆண்டுகளாக தினமலரின் செயல் தொடர்கின்றது.


அவர் கட்டுரையின் போக்கின்படி ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன?” என்று பார்த்தால் இதே பழிக்கு ஆளான  காஞ்சி ஜெயேந்திரரையும் காப்பாற்றுவதற்கான வெள்ளோட்டம் என கருத்தில் கொள்வதா? அல்லது ”அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன!”  என்பது மூலம் எங்கள் ஜெயேந்திரரைக் காப்பாற்றியது போல் இவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லையே என நீலிக்கண்ணீர் வடித்து தமிழக எதிர்சிந்தனை அரசியற்தலைவர்களை வம்பிழுக்கின்றாரா அல்லது அரசிடமும், நீதித் துறையிடமும் கோவிந்தசாமியின் விடுதலைக்காக மன்றாடுகின்றாரா?

தேசியதமிழ் இதழ் என கூறிக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு உலை வைப்பதாக ”இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.”  என கட்டுரையின் வரிகள் வருகின்றனவே; அவர்களின் நோக்கம் தான் என்ன?


இது போல தான் கூடங்குள போராட்டத்தினை ஏதோ தீவிரவாத போராட்டம் போலவும்,  அதற்கு எங்கேயிருந்து நிதி வருகின்றது என அரசு தீவிரமாய் கண்காணிப்பது போலவும் திரித்து அப்பாவி பொதுமக்களிடம் பீதியை கிளப்பி வருகின்றது. தமிழக நாளிதழ்களிலேயே  இது போன்ற செய்திகளை இந்த இதழிலிருந்து மட்டும் தான் வருகின்றது என்பதை அனைத்து இதழ்களையும் வாசிப்பவர்களுக்கு தெரியும்.


எத்தனையோ முறை பொதுமக்கள், அரசியற் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள்,  தமிழ் அமைப்புகளிடமிருந்து கண்டனக் குரலினையும் ’இதழ் எரிப்பு’ போராட்டத்தினையும் சந்தித்தபின்பும் அடங்குவோமா என்கிறது இந்த தினமலர்! 


அரசியலிலும், அதிகார வர்க்கத்திலும்  எப்படி தாதாக்கள் உருவாகின்றனரோ அது போலவே ஊடகங்களில் தாதாகிரிகள் உண்டு என்பதை இந்த இதழ் நிருபணம் செய்கின்றது.  இவர்களுக்கெல்லாம் கடிவாளம் இட சட்டத்தில் இடமே இல்லையா? அரசிடம் தான் ஆளுமையில்லையா? இவையெல்லாம் எதிர்கொள்ளும் அளவிற்கு இவர்களிடம் இருக்கும் பின்புலம் தான் என்ன?


தமிழகத்தில் இருந்துக் கொண்டே தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் அவர்களின் உணர்விற்கும்  ஊறு விளைவிப்பதை நேற்றுவரை அறிவார்ந்தவர்கள் மட்டுமே உணர்ந்திருந்தனர். ஆனால் இன்றோ, இவர்களால் வசியப்படுத்தப்பட்ட வாசகர் கூட்டமே சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இவர்கள் உலகத் தமிழர்களால் வீசியெறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்ந்து  தன்னை திருத்திக்கொள்ளட்டும் இந்த தினமலர்!


தினமலரில் வெளியான கட்டுரை இது தான்:
-------------------------------------------------------------------------------------------------------------------
செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?
பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011,23:28 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 14,2011,11:47 IST
 
அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.

இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!

-நமது சிறப்பு நிருபர்--------------------------------------------------------------------------------------------------------------------
Kr Kannan - bangalore,இந்தியா  2011-11-14 09:56:12 IST
இலங்கையில் இன்னும் 7000 பேர் வதை முகாம்களில் இருப்பதாக மன்மோகன் நேற்று கூறி இருக்கிறார் ( ஆனால் உண்மை இன்னும் பல மடங்கு அதிகம் ). இலங்கையில் 7 ரகசிய சித்ரவதை கூடங்கள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் ஐ நா வில் கூறி இருக்கிறர்கள். அப்படி பட்ட இலங்கை போராட்டத்தையும், காமுகனுடைய செயலையும் ஒப்பிடுவது ஏன். முடிந்தால் அங்கு பரிதவிக்கும் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்க உதவி செய்யுங்கள். ஒவ்வொரு தமிழனும் இலங்கையில் சித்திரவதை பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர் 2011-11-14 09:41:13 IST
நண்பர்களே, தயவு செய்து மறுபடியும் இந்த கட்டுரையை ஒவ்வொரு வரியாக நிறுத்தி பொறுமையாக படித்து பாருங்கள்.யாரும் தினமலரை திட்டாதீர்கள்....தினமலர், கோவிந்தசாமிக்கு ஆதரவாக பேச வில்லை.பேரறிவாளன்,முருகன்,மற்றும் சாந்தனை ஆதரித்து போராட்டம் நடத்தும் அரசியல் தலைவர்கள் கோவிந்தசாமி ஒரு தமிழன்,மாற்றுத் திறநாளி என சொல்லி வக்காலத்து வாங்காதது ஏன் என்று மறைமுகமாக கிண்டல் செய்து இருக்கிறது.ஆனால் இந்த கட்டுரையை எழுதிய நிருபர் மூன்றாவது பாராவில் கொஞ்சம் சொதப்பி விட்டார்.

Musthafa Sethu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2011-11-14 09:38:23 IST
இங்கு வெளிநாட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இதுபோல கட்டுரைகள் இட்டு கோல் மூட்டும் வேலை வேண்டாம். நிருபரின் அக்கா தங்கை யாராவது இதுபோல விபத்து ஏற்பட்டால் இந்த கட்டுரை எழுதுவாரா,பேனா கிடைத்தால் என்ன வேண்டுமானால் எழுதலாம் என்ற எண்ணத்தை தினமலர் கைவிட வேண்டும் .

B Dhanasekaran - kUALA LUMPUR,மலேஷியா 2011-11-14 09:26:11 IST
 
தப்பு எவன் செஞ்சாலும் தப்பு தான் என்பது என் கருத்து...!! "தமிழன்" என்று சொல்லி அரசியல் செய்ய தினமலர் துடிப்பதேன்...!!!
j.kumar - khafji ,சவுதி அரேபியா 2011-11-14 09:14:48 IST
தினமலர் பத்திரிகை தனது வரம்பை மீறுகிறது
Jeya Chandran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்2011-11-14 09:00:18 IST

நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த தினமலர் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் என்று நினைக்கவில்லை .......

தம்பி கூர்மதியான் - id,இந்தியா 2011-11-14 08:53:00 IST

நாங்கள் உண்மையிலேயே செந்தமிழர்கள் தான்..எங்களுக்கு தெரியும்,எதற்கு எதிர்வினை செய்ய வேண்டும்..எதற்கு எதிர்வினை செய்யகூடாது என்று..நீங்கள் உங்கள் வரம்புடன் நில்லுங்கள்..யாரும் அறிவுரை கூறும் அளவிற்கு தமிழன் தாழ்ந்து விடவில்லை...எங்கள் குடி மூத்தகுடி..

natarajan - dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2011-11-14 08:51:50 IST

உண்மையின் உரைகல், நடுநிலைமை என்ற பெயரில் கருத்து திணிப்பை,பரப்புரையை,காழ்புணர்வை வெளிக்காட்டும் தரமற்ற செய்திகள். தினமலர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்..

Jaganathan - Shanghai,சீனா 2011-11-14 08:18:18 IST 
தின மலர் இது போல மூன்றாந்தர அலசல்களை வெளியிட்டு தரம் தாழ்ந்த பத்திரிக்கை என்பதை மேலும் ஒருமுறை நிரூபித்துள்ளது., அவர் "சிறப்பு நிருபரா" அல்லது "செருப்பு நிருபரா?"Moris - negercovil,இந்தியா 2011-11-14 08:51:06 IST
கோவை யில் ஜவுளி வியாபாரி யின் 12 மற்றும் 08 வயது குழந்தைகளை கற்பழித்து கொலை செய்த நபர் jaya kumar ஒரு மலையாளி, அவனை நம் தமிழக போலீஸ் encounter இல் சுட்டு கொன்றது, இதற்கு ஒரு மலையாளி யும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ..................!!!
Muthusamy - sankaran koil,இந்தியா 2011-11-14 08:49:48 IST
தினமலர் இதழ் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்...தமிழர்களை இவ்வளவு கீழ்த்தரமாக நினைத்ததற்கு ........
Stephen Robin - Chennai,இந்தியா 2011-11-14 08:36:06 IST
கூடங்குளம் விசயத்திலும் தினமலர் நேர்மையாக நடக்கவில்லை. மக்களின் அச்சத்தை உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஜாதி பிரச்சினையை தூண்டி விடுகிறது.
Dinesh.A - Coimbatore,இந்தியா 2011-11-14 08:26:08 IST
For the publicity of your paper, please dont create any non sense issues. He is the criminal, and he got the punishment. That's it. How dare you can make this as a state problem. India is one nation. Don't try to split it.
Shabaaz - Vellore,இந்தியா 2011-11-14 08:10:10 IST 

தினமலர் சிறப்பு நிருபருக்கு மூளை சலவை செய்யப் பட்டிருக்கிறது. பாவம் அதனால் தான் ஒரு சிறப்பு செய்தி என்ற பெயரில் ஒரு பிதற்றல். தேவையா இது போன்ற செய்திகள். கற்பழித்த கொடூரன் இனம் பார்த்தா இந்த பாதக செயல் செய்தான். இந்த அறிக்கையில் வரிசை படுத்திருக்கும் தலைவர்கள் யாரும் இது போன்ற கொடுமைகளை ஆதரித்ததும் இல்லை, அவர்கள் பேச்சை கேட்டு தலை ஆட்ட தமிழ் மக்கள் செம்மறி ஆட்டு கூட்டமும் இல்லை. நக்கல், நையாண்டி என்கின்ற பெயரில் ஒரு பிதற்றல். தமிழின தலைவர்கள் அனைவருடைய பெயரையும் நக்கலாக வரிசை படுத்திய தினமலருக்கு தமிழ் இன மக்களுக்காக ஜெயா போலி கண்ணீர் வடித்ததும், நாடகம் பல ஆடியதும் ஏன் கண்ணை மறைக்குது.jayes rajan - Coimbatore,இந்தியா 2011-11-14 08:08:57 IST 

ஒரு மிருகத்திற்கு உங்கள் பத்திரிகை வக்காலத்து வாங்குவதா? இதில் தமிழ் மலையாளம் எங்கிருந்து வந்தது? ஏன் இப்படி பிரச்சினை உண்டு பண்ணுகிறீர்கள்? இதுதான் உங்கள் பத்திரிகை தர்மமா?

david prasanna - singapore,சிங்கப்பூர் 2011-11-14 08:22:58 IST
குற்றம் செய்தவன் தண்டிக்கபட வேண்டும். அய்யா சிறப்பு நிருபரே, இது போன்ற சம்பவம் உங்கள் குடும்பத்தில் நேர்ந்தால் தமிழன் மலையாளி என்று பிரித்து பேசுவீரா? இந்திய இறையாண்மையை சீர் குலைப்பது போன்ற இது மாதிரி செய்திகளை தினமலர் தவிர்க்க வேண்டும்.


Anand Muniasamy - Alkhor,கத்தார் 2011-11-14 07:58:52 IST
Dear dinamalar, Dont try to make division between keralites and tamilians. If any body support the accused it will definitely back fire. Let the accused should die. Here there is no question of supporting the accused. Dont try to create confusion and dont degraded yourself, dont spoil your reputation by publishing this type of article. Thanks.
kies sazz - Jurong,சிங்கப்பூர் 11-11-14 07:48:35 IST
என்னய்யா இப்படி இன பிரிவு கலவரம் போல எழுதுகிறிர்கள்

tiruna20 - chennai,இந்தியா 11-11-14 07:50:16 IST
வர வர தினமலர் நாளிதழ் மிக கேவலமாக நான்கு அறிவு உள்ளவன் மாதிரி செய்திகளை வெளிடுவது அதன் தரத்தை குறைக்கின்றது. இதில் ஜெ ஜெ பெயரை ஏன் சேர்க்கவில்லை?
Mani Maran - Woodlands,சிங்கப்பூர் 2011-11-14 07:07:15 IST
இது தவறான கட்டுரை ...தயவுசெய்து இதை நீக்கிவிடுங்கள் ...தமிழன் எதை செய்தாலும் அதை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்க கூடாது .இது கொடுரமான கற்பழிப்பு .இந்த கொடிய மிருகத்திற்கு இதைவிட வேற என்ன தண்டனை கொடுக்க முடியும் ?...இந்த கொடுமை தமிழ் நாட்டில் நடந்திருந்தால்,ரணகளம் அல்லவோ ஆயிருக்கும்.அவர்கள் சட்டப்படி நடந்திருக்கிறார்கள் ..இதில் தமிழர்களையும் ,அதிலும் கலைஞரையும் வம்புக்கு இழுப்பது எந்த விசயத்தில் ஞாயம் ???...இந்த தீர்ப்பு ,தமிழ் உணர்வுள்ள என்னை போன்றோருக்கு மகிழ்ச்சியே !!!!! தமிழன் என்று சொல்லடா...அவன் தறுதலையாக இருந்தால் ,தலையை கூட எடுடா!!!!!!!
rajan - CA,யூ.எஸ்.ஏ 2011-11-14 07:02:45 IST
என்ன கொடுமை....ப்ளீஸ் ஸ்டாப் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதை. எல்லாருடைய பேரும் இருக்கு ஏன் அம்மா பேரு இல்ல .... ப்ளீஸ் ஸ்டாப் இதுபோன்ற சீப் அரசியல் பண்ணுவதை.
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர் 2011-11-14 06:53:38 IST
தினமலர் இதைப்போன்ற தவறான கோணத்தில் சிந்திக்கும் நிருபர்களை வேலைக்கு வைத்துக்கொள்வதில் சிறுமைப்பட வேண்டும். இறந்த பெண்ணுக்கு நீதி மட்டும் கிடைத்தால் மட்டும் போதாது - இப்படிப்பட்ட குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயம் வர வேண்டும். பெண் குழந்தை இருந்திருந்தால் இந்த நிருபர் இதைப்போல கட்டுரை எழுதியிருக்க மாட்டார். ஒவ்வொரு மாநிலமும் அதன் அண்டை மாநிலத்தின் உறவை மேம்படுத்த வேண்டும். அதற்கு பத்திரிக்கைகள் நல்ல பங்காற்ற முடியும். பத்திரிக்கைகள் பங்காற்ற முடியா விட்டால் கூட உறவுக்கு உலை வைக்கக்கூடாது. உங்களது நோக்கம் நமது முட்டாள் அரசியல் வாதிகளை கேவலப்படுத்துவது என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அது அவமானப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட இந்த பெண்ணுக்கு நீங்கள் காட்டும் அவமரியாதை என்பதை மறந்து விட வேண்டாம்.
RAJAN KIRAGORI NADAR - mumbai,இந்தியா 2011-11-14 06:50:42 IST
மனுஷனுக்கு முதல மனுசத்தன்மை வேண்டும். ஒரு பெண்ணை ரயிலில் இருந்து தள்ளி விட்டுட்டு அவள் உயிர் இருந்தும் இல்லாத நேரத்தில் கெடுத்துவிட்டு கொலை செய்த மஹா பாவி அவன் தமிழன் என்பதே முதலில் கேவலம், மேலும் சாதி பிரச்சினை வேற தூண்டுகிறாய். தமிழன் என்றால் என்ன கொம்பு மூணா, முதலில் மனுசனை மனுசனா பார்க்க பாரு, அதற்கு பிறகு தமிழனா பாரு. வாசகர் கருத்துகள் தணிக்கை செய்து போடும் தினமலர், அவர்கள் நிருபர்கள் போடும் செய்திகளையும் தணிக்கை செய்தே போட வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். ராஜன் கி வடக்கன்குளம்.
Navas Shahib - riyadh,சவுதி அரேபியா 2011-11-14 03:10:17 IST
தினமலர் உங்களுக்கு தமிழர்களை அவமான படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறீர்கள். தமிழன் என்றும் நியாயத்திற்கும் , நல்லவைகளை உடனே ஏற்று கொள்கிற மனமும், வீரத்தை விட மனித நேயமே சிறந்தது என்று நினைபவர்கள். நீங்கள் எவள்ளவு விசத்தை தூவினாலும், எங்கள் அறிவு மழுங்காது. உண்மையான பிரச்சனைக்கு குரல் குடுப்போம்.

Mmm - abcd,இந்தியா 2011-11-14 03:32:06 IST
தினமலர் எதை எதையோ சம்பத்தப்படுத்தி, அரசியல்வாதிகள் போல - மக்களின் உணர்வுகளை தூண்டுவது போல கட்டுரை பிரசுரித்து இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது....
Summa poravan - Chennai ,இந்தியா 2011-11-14 01:28:19 IST
தினமலர் இவ்வளவு கேவலமாகி போய்விட்டதே? இது உங்களுக்கு கருணா மேல் உள்ள தனிப்பட்ட எரிச்சலை காட்டுகிறது. நடுநிலையான பத்திரிகை என்று சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் வேணும்.
raghul rajan - Cuddalore,இந்தியா 2011-11-14 01:19:19 IST
பத்திரிகை மரபை மீறி செயல்படுகிறது தினமலர்! குசும்புதனத்தை நீக்கி சமுகத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் பொறுப்பாக செய்திகளை வெளியிடவும் ! நாட்டில் விவசாயி தற்கொலை, பட்டினி சாவு போன்றவற்றை சொல்வதில் மட்டும் வெட்கம்! ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு? நான் தினமலர் ரசிகனும் இல்லை எதிரியும் இல்லை!
Download As PDF