திங்கள், 26 செப்டம்பர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-15

ஐ.நா.வின் பிரதமர் உரை…. சுயமரியாதையா அல்லது தற்காப்பிற்க்காகவா?

ஐ.நா. அரங்கில் நமது பிரதமரின் உரை அகில உலகை அண்ணாந்து பார்க்க வைத்திருப்பதாக இதழ்களில் வந்துள்ள செய்தி வரவேற்கக் கூடியதே என்றாலும் மறைமுகமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சுட்டிக்காட்டும் வண்ணம் ஏன் வினாக்களை எழுப்பவேண்டும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. கொஞ்சம் அயர்ந்தால் வருங்கால சந்ததியினரையே கபளீகரம் செய்ய வைக்கும் அணுசக்திக்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை என அமெரிக்காவின் ஆட்டுவிப்பிற்கு ஆடியவரான அவரின் இன்றைய உரையினை மட்டும் வைத்து சுயமரியாதையுடன் அவர் பேசுவதாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


      அதோடு இன்னமும் குண்டுவெடிப்புகளுக்கு துணை போகும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தினையோ, தமிழினத்தை வேரறுத்த இலங்கைப் படுகொலைப்பற்றியோ உரைகளை தவிர்த்தது மூலம் மேலும் ஐயம் எழுகின்றது. இலங்கையின் மீது போர்க்குற்ற நடவடிக்கை வேண்டும் என ஐ.நா.வின் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு குரல் எழுப்பியுள்ள நிலையில் அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமேயாயின் இன்றைய ஆளும் காங்கிரஸின் தலைகள், இதன் பின்னணியில் பெருமளவு உருளவும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது. மேலும், காங்கிரஸின் ஆட்சிக்கு எதிராக அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு நேரிடையாகவே அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது, வளைகுடா & ஆப்ரிக்கா நாடுகளின் மக்கள் எழுச்சிக்கு தீ வார்த்து தன் நலனைப் பாதுகாக்கும் மேற்கத்திய சூழ்ச்சிகளுக்கு தாமும் இரையாக நேரமிடும் என்கின்ற ஞானம் தற்போது தான் வந்துள்ளது போலும்! ஆதலால் தான் பாகிஸ்தான் பயங்கரவாதத்தினைக்கூட நாங்களே சமாளித்துக் கொள்கின்றோம் என ஐ.நா.வின் உரையில் அதை புறக்கணித்தார் போலும்! (இலங்கை தமிழின அழிப்பு சம்பவத்தில் இராணுவத்திற்கு ஆயுத தளவாடங்கள் உட்பட அனைத்து உதவிகள் புரிந்த வகையில் பாகிஸ்தானுடன் கூட்டுக் களவாணிகளாக கை கோர்த்தது உலகறிந்த விஷயம்). இவ்விவகாரத்தில் இலங்கைக்கு பேரார்வம் கொண்டு ஒத்துழைத்த ஜப்பானை சுனாமியின் பெயரால் இயற்கை தண்டித்துவிட்டது. ஆனால் இந்தியக் குடிமக்களின் எதிர்ப்பையும் மீறி உதவிய தி.மு.க. மெல்ல மெல்ல அனுபவிக்கின்றது. காங்கிரஸும் இனி விரைவில் அனுபவிக்கும் என சமீபத்திய நிகழ்வுகள் கூறுகின்றது.


தனக்கென்று வந்தால் தான் தெரியும் தலைவலியும் திருகு வலியும் என்று சும்மாகவா சொன்னார்கள்!? நமக்கெதுக்கு ஊர் / உலக வம்பு... வாங்க கார்ட்டூன்களைப் பார்க்கலாம்.சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும்,  அதனை பிரசுரித்த தினமலர்தினமணி விகடன், கல்கி, துக்ளக்... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

Download As PDF

புதன், 21 செப்டம்பர், 2011

வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்! – 3


காலம் தான் பதில் சொல்லும்!
ஆப்ரிக்க, வளைகுடா நாடுகளில் இன்னமும் புரட்சி ஓயவில்லை. வல்லாதிக்க நாடுகள் தங்களின் நீண்ட நாள் கனவினை அங்குள்ள அதிருப்தியாளர்களை தங்கள் வலையில் வீழ்த்தி எண்ணத்தினை சாதித்துக் கொள்ள, எரியும் தீயிற்க்கு எண்ணெய் வார்த்த வண்ணமிருக்கின்றனர்.  கொடுங்கோலர்களிடமிருந்து மீண்டாலும் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கை வளம் பெறுமா இல்லை இந் நிலைக்கும் கீழே சீரழியுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்!

ஃபுகுஷிமா அணுமின் நிலைய பேரழவிற்கு பொறுப்பேற்று ஜப்பான் பிரதமர் பதவி விலகல்லிபிய அதிபர் கடாஃபியின் தலைக்கு விலை
சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டி மக்கள் புரட்சி


அமெரிக்காவின் நிதிநிலை ஸ்திரத்தன்மையின் பலவீனம்லிபிய அதிபர் கடாஃபி தலைமறைவு

இஸ்ரேலைக் கட்டுப்படுத்த ஐ.நா. திணறல்
சீனாவின் ஆற்றலைக்கண்டு மிரளும் அமெரிக்காசிரியாவைத் துண்டாட நினைக்கும் சக்திகள்துண்டாடப்பட்ட  லிபியா

மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

Download As PDF

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

வேண்டாமே விபரீதம்...புகைப்படம் பார்ப்பீர்; புரிந்துணர்வுக் கொள்வீர்! – கூடங்குளம் அணுமின் நிலையம்!

Nuclear disaster


 
இயற்கையின் இடர்பாடுகளால் மட்டுமல்ல, மனிதனின் சின்னஞ்சிறு தவறுகளினாலோ அல்லது இயந்திர & மின்னணு சாதனங்களின் சின்னஞ்சிறு பழுதுகளினாலோ கூட மிகப்பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்பது தான் அணுமின் நிலையங்களின் வரலாறு. இதற்கு அமெரிக்காவின் ’த்ரீ மைல் ஐலேண்ட்’, இரஷ்யாவின் ’செர்னோபில்’ விபத்துக்களை உதாரணமாகக் கூறலாம்.
தவறான முடிவுகளை மிகச்சரியாக எடுப்பதில் நமது இந்திய நடுவண் அரசிற்க்கு நிகர் வேறெதுவுமில்லை என்பதை நிரூபிப்பது போலத்தான் சமீபகால நிகழ்வுகள் இருக்கின்றன.  அதிலொன்று தான் கூடங்குளம் அணுமின் நிலையம். இயக்கத்தில் இருக்கும் அணுமின் நிலையங்களை படிபடியாக மூடுவிழாவினை மேற்கத்திய நாடுகளுடன் (அமெரிக்கா, ஐரோப்பா) தரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உலகப்புகழ் பெற்ற, இயற்கையின் சீற்றத்தால் சீண்டப்பட்டு பேரழிவிற்கு உள்ளான ஜப்பானும் நடத்திக்கொண்டேயிருக்க…. இந்தியா மட்டும் ஏனோ இதில் பேரார்வம் காண்பிக்கின்றது.   இதில் என்ன ஒரு கேலி என்றால், கூடங்குளம் அணுமின் நிலையமனாது.. இரஷ்ய தொழில்நுட்பத்துடன் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன் கூடியது என்கின்றனர். ஆனால் அந்நாட்டில் நிகழ்ந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்து தான் உலகிலேயே மிகக் கொடூரமானது.

த்ரீ மைல் ஐலேண்ட்(அமெரிக்கா) :  1979ம் ஆண்டு மார்ச் மாதம் 28ந் தேதி அணு உலையினைக் குளிரூட்டும் சாதனத்தின் ஒரு இயந்திர வால்வில் ஏற்பட்ட பழுதால், உலையினை குளிரூட்ட வேண்டிய திரவம் வராததினால், அதே நேரத்தில் உலையிலுள்ள திரவத்தினை வெளியேற்றும் பம்ப்புகள் பணிபுரிந்ததால் அந்த உலையின் உஷ்ணம் கூடியது. மாற்று ஏற்பாடாக எமர்ஜென்ஸி கூலிங் ஸிஸ்டம் இருந்தும் போதுமானதாக இல்லை. குறை எங்கேயுள்ளது எனக் கண்டறிவதற்கே 2 மணி நேரமாக அதற்குள் ஹைட்ரஜன் கூடிப்போக அவ்வுலை வெடித்து சிதறியது.


செர்னோபில் (இரஷ்யா): 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந்நதேதி மின்நிலையத்தின் ஒரு யூனிட் வழமையான இயக்கத்திலன்றி, உலையின் பாதுகாப்பு / மின்உற்பத்தி திறனை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.  பரிசோதனையின் போது நிகழ்ந்த விளைவுகள் சீராக இன்றி தாறுமாறாக வந்தவண்ணமிருந்தன.  கிராஃபைட்டுகளைக் கொண்டு இவர்கள் சில சோதனை முயற்சிகளை புரியும் போது எதிர்பாராத விதமாக பெருந்தீ மூள… அதனை அணைக்க திரவ நைட்ரஜன், மணல், நியூட்ரான்களை உள்வாங்கும் இராசயனங்கள் என… வான் வழியாகவும், தரைவழியாகவும் வரை கிட்டத்தட்ட 5000டன் (1 டன்= 1000கிலோ) பொருட்களை வீசிய பின்பே தீயினைக் கட்டுக்குள் கொணர முயன்றது. இரண்டு நாட்களாக நிகழ்ந்த இப்போராட்டங்களை வெளியுலகிற்கு தெரியாமலே இருக்க, வான் மேகக் கூட்டங்கள் வாயிலாகவும், அங்குள்ள பறவை போன்ற உயிரினங்கள் மக்கள் அடர்த்தி மிகுந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அணுக்கதிர் வீச்சையும் கழிவுகளையும் கொண்டு சேர்த்தது.
சுவீடன் நாட்டு விஞ்ஞானிகளிகள் கிழக்கிலிருந்த வந்த இயல்பிற்கும் மீறிய கதிர்வீச்சினைக் கண்டுபிடித்த பின்னரே உலக அரங்கிற்க்கு இவ் விபத்து குறித்து தெரிய வந்தது.  இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசிய போது எழுந்த கதிர்வீச்சினை விட 200 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது இரஷ்யாவின் “செர்னோபில்” அணுமின் நிலைய விபத்தில்!

மற்ற ஆலைகளைப்போல் அணுமின் நிலையக் கழிவுகளை அவ்வளவு எளிதாக கருத்தில் கொள்ளமுடியாது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு சேமித்து பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். அணுகழிவுகளுக்காக 3 இலட்ச டன் சிமெண்ட் அடர்த்திகொண்டு கான்கிரீட்டால் கட்டப்பட்ட அறையே விபத்திற்க்குப் பின்பு இன்று கேள்விக்குறியாகிவிட்டது.
 நம் நாட்டின் மொத்தத் தேவையான மின்சாரத்தில் 5% கூட ஒட்டு மொத்த அணுமின்நிலையங்களால் கொடுத்துவிட முடியாது. உலகமே இதற்கு படிப்படியாக மூடுவிழா நடத்தும் போது வளர்ந்த நாடுகள் நமக்கிற்கு உதவ முன்வருவதை நினைத்தால்... அவர்களின் ஆராய்ச்சிக்கும், பரிசோதனைக்கும் நாம் ஒரு தளமாகி வருகின்றோமோ எனும் ஐயம் நிறையவே எழுகின்றது.
இதுவரை மிகப்பெரியத் தொகையினை முதலீடு செய்த பின்பு பின்வாங்குவது உசிதமல்ல என்கின்ற பொருளாதார / வணிக சிந்தனையை கழற்றிவிட்டு, மின் அணு உலை விபத்தில் மாசடைந்த செர்னோபில் நகரை தூய்மைப்படுத்த இன்னமும் இயலவில்லை என்கின்ற வேதனையான உண்மையினை உணர்ந்து வருங்காலங் குறித்த தொலைநோக்குப் பார்வையுடன், மனித சமூகத்தின் பாதுகாப்பு உணர்வுடன் அணுக வேண்டியது தான் இன்றைய தேவை!
பேரழிவு என்பது விபத்தின் போது மட்டுமல்ல… அதன்பின் வரும் பல தலைமுறைகளுக்கும் புற்றுநோய் போன்றவைகள் மட்டுமல்ல.. மரபணு மாற்றங்களால் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதற்கு மேற்காணும் ”உக்ரைன் தேசிய அருங்காட்சி’யகப் புகைப்படமும் கீழ்காணும் செர்னோபில் விபத்திற்க்குப் பிந்தையதொரு பிரசவமும் ஒரு சான்று! பார்ப்பதற்கே மனம் பதைக்கும் புகைப்படங்களை பிரசுரிக்க மனம் துணியாததால் இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
*       சிக்கிமில் நிகழ்ந்த நிலநடுக்கம், கூடங்குளத்தில் நிகழாது என்பது என்ன நிச்சயம்?! இயற்கையை துல்லியமாகக் கணிப்பவர்கள் எவருமில்லை.
*       ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் போது முக்கிய நகரங்களை மட்டுமல்ல தொழிற்சாலைகளையும், அணுமின் நிலையங்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. 1980லிருந்து இதுவரை 6 முறை அணு உலைகளின் மீது தாக்குதல் உலக நாடுகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள முயற்சி நடந்துள்ளது.
*      வறட்டுக் கொள்கைகளுக்காகவோ அல்லது அரசியற் காழ்ப்புணர்விற்க்காகவோ கண்மூடித்தனமாக அணுமின் நிலையங்களை எந்நிலையிலும் வரவேற்க வேண்டாம்!
*       கூடங்குள மக்களின் போராட்டத்திற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிப்போம்! இது ஏதோ அந்த ஊர் மக்களின் பிரச்னை என்றிராமல், ஒட்டுமொத்த தமிழகமும் அணிதிரண்டு ஆளும் அரசிற்கு உணர்த்துவோம்! வென்றிடுவோம்!!


நன்றி:
Pictures:  Google


பிற்சேர்க்கை:
படிப்படியாகஅனைத்து அணுமின் நிலையங்களையும் மூடவேண்டும்என்பதில் அனைவருக்கும் உடன்பாடே! உலகில் மின்சக்தி தேவைக்காக அதிக பயன்பாட்டில் இருக்கும் ஜப்பானில் (34%), கடும் மின் பற்றாக்குறை இருந்தாலும் பரவாயில்லை; இயக்கும் மற்ற அணுமின் நிலையங்களை மூடுங்கள் என இரண்டு நாட்களுக்கு முன்பு இலட்சக்கணக்கான மக்கள் தலைநகர் நோக்கி அணிதிரண்டுள்ளனர். மாற்று வழி நிறைய இருக்கின்ற போது மனித சமூகத்திற்கே உலை வைக்கும் இத்திட்டங்களை தவிர்ப்பதே நலன்.

கூடங்குளத்திற்க்கும், கல்பாக்கத்திற்க்கும் அடிப்படையில் தொழில்நுட்ப / பாதுகாப்பு ரீதியில் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. கள உண்மை நிலவரம் அறிய கீற்று தளத்தினை சுட்டுக. காண்க... http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16513

மண்ணின் மைந்தர்கள் மிக அருமையாக அணுசக்தி கழகத்தின் பாதுகாப்பு விதிகளை எப்படி மீறியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியும்.


Download As PDF

புதன், 14 செப்டம்பர், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-14

ஆதிக்கசாதி ”தேவர் குருபூஜை”க்கு மாற்றாக அடக்கப்பட்ட சாதியினர் தங்களின் சமூக ஒற்றுமையைக் குறிக்க ”இமானுவேல் சேகரன் குருபூஜை” செய்கின்றனர்.  வாக்கு வங்கிகளுக்காக பிற சமூகத்தில் உள்ள அரசியற்கட்சியினர் (தி.மு.க / அ.தி.மு.க…போன்ற கட்சிகள்) தேவர் குரு பூஜையில் கலந்துக் கொள்ளும்போது இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஆண்டுதோறும் மறவாமல் மருத்துவர். இராமதாசு நினைவுக் கூர்கின்றார்.
குறிப்பிட்ட சமூகத்தலைவர்களுக்காக ஒவ்வொரு முறையும் குருபூஜை செய்யும், பொழுது தமிழகத்தில் இனம்புரியாத பதற்றம் இருக்கும். இம்முறை அது கலவரத்தில் முடிந்து 10 உயிர்களை பலிகொண்டுள்ளது.  இந் நூற்றாண்டிலும் சாதிவெறியின் தனலை பாதுகாக்கும் இக் குருபூஜைகளுக்கு முடிவு தான் என்ன…? மானிடராய் பிறந்தவர்களுக்கு குருபூஜை செய்யும் வழக்கை அரசு ஆணை இட்டு ஒழிக்க முன்வரவேண்டும்.   அவர்கள் எவ்வளவு புனிதர்களாக இருந்தாலும் ஆன்மீக திலகங்களாக இருந்தாலும் அமரர் ஆனவர்களாக இருப்பினும் அவர்களை நினைவுக் கூர்வதில் தவறில்லை. ஆனால் சமூக ரீதியான பதற்றத்தினைத் தூண்டும் இந்நிகழ்வுகள் வேண்டாமே! இதற்க்கும் ஒரு தில் வேண்டும்! தமிழகம் பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்; சமூக அக்கறையுள்ள துணிச்சலான ஒரு தலைவரை காண்பதற்கு!


சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த (மதன், பாலா, மதி, முத்து...) ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த விகடன், தினமணி, தினமலர், கல்கி... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

Download As PDF