செவ்வாய், 28 ஜூன், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-10!

தற்போதைய பரபரப்பான செய்திகளில் பெரிதும் அடிபடுவது கார்ப்பரேட் (ஆ)சாமிகளின் கொட்டங்கள் தான். புட்டபர்த்தி சாய்பாபா இறந்தப் பின்பு ஆசிரமத்தின் சில அறைகளில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புள்ள தங்கங்களும், ரூபாய் கட்டுக்களும் பிடிபட, அவரின் வழிநடக்கும் பக்தர்கள் பலருக்கும், அவரின் புனிதத் தன்மைக் குறித்து சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.



115 நாட்களாக கங்கை நதியை தூய்மைப் படுத்தக்கோரியும், நிலக்கரி சுரங்க திருட்டுக்களை தடுக்கக் கோரியும் உண்ணாநோன்பினை மேற்கொண்டு உயிர் துறந்த சுவாமி நிகம் ஆனந்தை ஆன்மிகத்தின் போர்வாளாகக் கருதும் தேசியக் கட்சிகளோ, இயக்கங்களோ கண்டுக்கொள்ளவே இல்லை. ஆனால் போலி பாபா இராம் தேவ் 9 நாட்கள் கூட தொடர இயலாமல் ஜகா வாங்கியதை ஏதோ பெரிய சாதனையாக ஊடகங்கள் திரித்துக் கூறுகின்றன. உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாகவே ஒருபடி மேலே சென்று தில்லியில் உண்ணாநோன்பில் நடந்தது என்ன விசாரிக்க விழைந்ததை வரவேற்கும் நிலையினில், சுவாமி நிகம் ஆனந்தின் உண்ணா நோன்பிற்கு காந்தி பிறந்த நாட்டிலேயே மதிப்பின்றி அதனால் உயிர் துறக்க நேரிட அது குறித்து ஏன் மௌனம் சாதிக்கின்றது என்பது தான் வியப்பாக இருக்கின்றது!



































சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!






Download As PDF

சனி, 25 ஜூன், 2011

தமிழகத்திலேயே முதன்முறையாக... ஓ போட வைக்கும் முதல்வர்!


உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக.... என்பது போல் அதென்ன... தமிழகத்திலேயே முதல்முறையாக...? யாரந்த முதல்வர்?!

விழி இருந்தும் மதி மயங்கும் மனிதர்களைத் தான் நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் விழி இழந்தும் விதியினை எண்ணி நொந்துவிடாமல் மதியுடனே சோதனைகளையும் சாதனைகளாக்கிய ஒரு அபூர்வ மனிதரை இப்போது நாம் காண இருக்கின்றோம். திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் புதிய முதல்வராக, ஆங்கில இலக்கியம் படித்த பேராசிரியர் டாக்டர் கே.எம். பிரபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஆமாம் இதிலென்ன சிறப்பு? இவருக்கு மட்டும் ஏனிந்த வரவேற்பு?!

இவர் பள்ளியில் படிக்கும் போதே லேசாக பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு முற்றிலும் பார்வை இழந்து விட்டார். இதனால் அவர் மனம் தளர்ந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். பின்னர் பி.எச்.டி. பட்டம் பெற்றார். சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் அரியானாவில் உள்ள பி.பி.எஸ். கல்லூரிக்கு பணி மாற்றமடைந்தார். அங்கே அவர் ஆங்கில மொழி ஆயவகங்களை அமைத்தார், இதன் மூலம் மாணவர்களை ஆறே மாதங்களில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை வளர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 3G போன்ற நவீனத் தொழிற் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இவரது சிறப்பம்சம். இவருக்குப் பக்கபலமாக இவரது குடும்பத்தினரும், உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் உள்ளமை இவரின் சேவையினை இன்னமும் செம்மை செய்கின்றது.

மீண்டும் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், ஆங்கிலமொழித் துறைத் தலைவராகவும் பொறுப்பேற்றவர், தற்போது திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பதவி உயர்வுப் பெற்று பணி நியமணம் செய்யப்பட்டுள்ளார். உடலில் உள்ள ஊனமெல்லாம் ஒருவரின் உயர்விற்க்கும் வெற்றிக்கும் தடையல்ல என்பதை தன்வாழ்வின் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கும் பேராசிரியர், முனைவர் பிரபு அவர்கள் மென்மேலும் சாதனைகள் பல புரிய வாழ்த்தி மகிழ்வோம்!

ஊனமுற்றோர் எனும் சொல்லொழித்து "மாற்றுத் திறனாளிகள்" எனும் பெயரிட்டு அவர்களுக்கென்று தனித்துறையினை அமைத்தது முந்தைய தி.மு.க. அரசு. இதை விட ஒரு படி மேலே சென்று, ஒரு மாற்றுத்திறனாளிக்கு பதவி உயர்வளித்து அதனை உயிர்ப்பிக்கின்றது இன்றைய அ.தி.மு.க அரசு. இச் செயலிற்க்காக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வோம்!
 
 
குறிப்பு: தன் பணிப்பளுவிற்க்கு இடையினிலும், தான் அறிந்த இச் செய்தினை மறவாமல் எனக்குத் தெரியப்படுத்தி வலைப்பூவில் பதிவிட வித்திட்ட  நண்பர் திரு. இராஜா அவர்களுக்கு நன்றி!
Download As PDF

ஞாயிறு, 19 ஜூன், 2011

ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா



ஸ்பெக்ட்ரம் புகழ் "நீரா ராடியா"விற்க்காக, தலைவர்களையும் அறிஞர்களையும் சிறப்பித்து அஞ்சல் தலை வெளியிடுவது போல தற்போது இன்டெல் நிறுவனம் அவரின் மதியூகத்தையும், செயலாக்கத்தையும் கௌரவிக்கும் பொருட்டு ஒரு மதர் போர்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? சிந்தித்தவரின் கைவண்ணத்தினைக் காணுங்கள்!



தொலை தகவல் தொடர்பு துறை மட்டுமின்றி, எரிவாயு, ஆற்றல், விமானப் போக்குவரத்து மற்றும் சுரங்கத்துறை என சகலத் துறைகளுக்கும் நீரா ராடியா மையப்புள்ளியாய் இருந்து அரசியல்வாதிகளுக்கும், தொழிலபதிர்களுக்கு உறவுப்பாலமாக திகழ்ந்ததை சித்தரிக்கின்றது





மின் அஞ்சல் மூலம் எனக்கு அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி! அதீத கற்பனையுடன் எளிய பாமரர்கள் முதல் கற்றறிந்த கல்வியாளர்கள் வரை ஓவியம் மூலம் மிகவும் எளிதாக புரியவைத்த அந்த முகம் தெரியாத கலைஞனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!



குறிப்பு: ஸ்பெக்ட்ரம் என்றாலே அகில இந்திய அளவில் கனிமொழியையும், கருணாநிதியையும் முதன்மைப்படுத்தி ஆ. இராசாவினை பலிகடாவாக்கியது போல இந்திய ஊடகங்கள் அனைத்தும் சித்தரிக்கின்றன . உண்மையென்னவெனில், இவர்களையும் தாண்டி கட்சி பாகுபாடின்றி, வர்க்க பேதமின்றி, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் இணைந்த 'கை'களுடன் மக்களைக் கூட்டணியாக சுரண்டியது தெரியவரும்.

ஒளிக்கற்றை ஊழலுக்காக ஆ.இராசா, கனிமொழி என பல முக்கியத் தலைகளும் உள்ளே இருக்க, ஜாமீனும் மறுக்கப்பட  தரகரான நீரா இராடியா மட்டும் எப்படி வெளியே உல்லாசமாக உலா வருகின்றார் என நீங்கள் சிந்தித்தால்... சில புதிர்களும் காங்கிரஸின் கயமைத்தனமும் புலப்படும்.


Download As PDF

புதன், 15 ஜூன், 2011

கார்ட்டூன்களைப் பாருங்க...குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-9!

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு... எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.























சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
Download As PDF

புதன், 8 ஜூன், 2011

எப்படி இருந்த நான்... இப்படி ஆகிவிட்டேனே!?... - பராக் ஒபாமா


என்னடா இவரு கன்னத்துல கைவச்சுகிட்டு கப்பல் கவிழ்ந்த மாதிரி சோகமா இருக்கிறாரேன்னுப் பார்க்கிறீங்களா?! பின்ன என்னங்க... எப்படி இருந்த இவரை இப்படி போட்டோ மார்ப்பிங்க்ல கவிழ்த்தா சோகமா இல்லாம சுகமாவ இருக்கும்?!

நம்ம ஊர் அரசியல் தலைவர்களைப் போல், அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் மாறினால் எப்படி இருக்கும் என நகைச்சுவை நயத்துடன் கணிணி துணையுடன் வரைந்த ஓவியங்களைக் காணுங்கள்! இதை எனக்கு மின் அஞ்சல் செய்த கத்தார் தோழர் திரு பிஜூ அவர்களுக்கும், இதனை பிரசுரித்த in.com இணையதளத்திற்கும் நன்றி! முகந்தெரியாத குசும்புக் கலைஞர், கணிணி ஓவியருக்கு நன்றியோ நன்றிகள்!!









குறிப்பு: எங்கே போயிற்று உன் நகைச்சுவை உணர்வு என என் நெருங்கிய வட்டம் அவ்வப்போது குசலம் விசாரிப்பதால் இது போன்று சில பதிவுகள் இடையிடையே வரும். இது சிந்தையை கிளராத மொந்தைப் பதிவு என நீங்கள் கருதினாலும் அது விந்தை இல்லை. மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்!
Download As PDF

சனி, 4 ஜூன், 2011

கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! - "நிடாகத்"... வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு..



சவூதி அரேபியாவின் நாளிதழில் வந்துள்ள செய்தி இந்நாட்டில் மட்டுமல்ல பெரும்பான்மையான நடுத்தர வர்க்க  வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு "இடி" விழுந்ததுப் போல இருந்தது. ஆம். பணி / தொழில் நிமித்தம் சவூதியினில் தங்கியுள்ள அனைத்து அயல் நாட்டினருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் வசிக்க நீட்டிப்பு தர இயலாது என்ற அமைச்சரின் பேட்டி வெளியானது. நம் மக்களுக்கு அவர்களை அறியாமலேயே, தாம் பீதியடைந்தோ அல்லது மற்றவர்களை பீதியூட்டியோ மகிழ்வதில் அலாதி ஆனந்தம் தான்!  தேவையற்ற குழப்பங்களுடனும், மன உளைச்சல்களுடனும் மின் அஞ்சல் வாயிலாக பரபரத்த நெஞ்சங்களை அமைதிப்படுத்தவே இப்பதிவு.

Ref:http://arabnews.com/saudiarabia/article442386.ece
      http://arabnews.com/saudiarabia/article442386.ece

 

(சவூதி) உள்நாட்டு மக்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தினை நீக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முனைகின்றது. முன்னர், அரசு நிறுவங்களில் "சவூதிமயமாக்கல்" திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட சதவீத மக்கள் அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக இருக்கவேண்டும் என சட்டம் இயற்றி செயற்படுத்தியது. அதோடின்றி, சில துறைகளையும், பதவிகளையும் கட்டாயமாக சவூதியினரே இருக்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது. இதனை தனியார் துறையினிலும் பின்பற்றக் கோரி நீண்ட காலமாக அறிவுறுத்தியது. அவர்களும் முன்னரெல்லாம் பெயரளவில், உரிமையாளரின் உறவினர்களோ அல்லது உயர்பதவியிலுள்ளவர்களின் பரிந்துரையினிலோ மண்ணின் மைந்தர்கள் சிலரை பணிநியமனம் செய்துக் கொள்வர். அப் பணியாளர்களில் பலர் சம்பளத்தேதியன்று மட்டும் வந்து கையெழுத்திட்டு, பணக் கவரைப் பெற்றுக்கொண்டு காணமல் போகின்ற வரலாறும் உண்டு என எனக்கு முன்பிலிருந்தே இருப்பவர்கள் அடிக்கடி நினைவுக் கூர்வதும் உண்டு..

ஆனால் இப்பொழுதெல்லாம் நிலவரம் அப்படியில்லை. கடுமையான, உடல் மற்றும் மூளை உழைப்பிற்கும் குறிப்பிடும் படியான தொகையினில் சவூதியினர் இருக்கின்றனர் என்பதே ஆரோக்கியமான உண்மை! இருப்பினும் இவர்களின் சதவிகிதம் குறைவு என  உள்நாட்டு தொழில் முனைவோர்களே கருதுவதாலும், உள்ளூர் மக்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதியமும் சலுகைகளும் அதிகம் என்பதாலும், உற்பத்தி மற்றும் சேவைகளின் தரத்தினில் குறை நேர்ந்திடக் கூடாது என்பதினாலும் தனியார் துறையினர் பெருமளவில் அயல் நாட்டவரினையே நாடுகின்றனர். குறிப்பாக, இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், சிறீலங்கா.... எனக் குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு வேலையின் தன்மைக்கேற்ப முக்கியத்துவம் தருகின்றனர். (ஒரே பணியினை ஒரு இந்தியரையும், மேற்கத்தியரையும் அமர்த்தினால் நம்மை விட கிட்டதட்ட 3 லிருந்து 6 மடங்கு வரை அதிகமான ஊதியம் அவர்களுக்கு வழங்க வேண்டிவரும். ஏனெனில் அவர்களின் நாணயத்தின் மதிப்பு, சர்வதேசச் சந்தையினில் நம்மை விட அதிகம்.)
 
மலிவான தொகையில் தரமான சேவை கிடைக்கும் போது இங்குள்ளவர்கள் உள்நாட்டு மனித வளத்தைவிட அயல்நாட்டினரையே விரும்புகின்றனர். இங்கு சுமார் 8 1/2 மில்லியன் (85 இலட்சம்) மக்கள் அயல்நாட்டிலிருந்து பணிபுரிபவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் எழுகின்றது. இதனைப் போக்கவே "நிடாகத்" எனும் புதிய திட்டத்தினை உருவாக்கி  விரைவில் செயல் வடிவம் கொடுக்க முனைகின்றனர்.




தன் நாட்டில் தனக்கு வேலை இல்லாது மற்ற நாட்டவ்ர்களுக்கு மட்டும் இடமளித்தால் எந்தவொரு குடிமகனும் கொந்தளிக்கத் தானே செய்வர். அதனை தவிர்க்கவும், வருடத்திற்கு 100 பில்லியன் ரியால்கள் (தோராயமாக 1 ரியால் = 12 ரூபாய்) தன் நாட்டைவிட்டு வெளியேறுவதை இயன்ற அளவிற்க்கு தடுக்கவும் "நிடாகத்" எனும் இத்திட்டத்தினை பயன்படுத்த விழைகின்றனர்.

என்ன தான் கூறுகின்றது இந்த "நிடாகத்"?

ஒரு நிறுவனத்தின் மனிதவளங்களில் எத்தனை உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர் என்பதினைக் கணக்கில் கொண்டு மூன்று வகையாக "சிகப்பு, மஞ்சள் & பச்சை"  என அந்நிறுவனங்களை பிரிக்கின்றனர்..

'சிகப்பு' என்பது அரசு கூறும் நெறிமுறைகளை கண்டுக்கொள்ளாத சவூதி மயமாக்கலில் பங்கேற்காத நிறுவனங்கள்.

'மஞ்சள்' என்பது அரசின் நெறிமுறைகளை நிறைவுச் செய்யாது பகுதி அளவு பின்பற்றும் நிறுவனங்கள்.

'பச்சை' என்பது அரசின் நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுபவர்கள்.

சவூதில் இப்போது நம்மவர்கள் (அவர்களின் பார்வையின் படி நாம் மட்டுமல்ல... அரேபியர்கள் அல்லாத அனைவருமே அயல்நாட்டவர்கள்) பணிபுரியும் நிறுவனங்களின் வண்ணத்தினைப் பொறுத்தே சவூதியில் தொழிலாளிகளின் 'இகாமா' என்கின்ற "சவூதி வசிப்பிட சான்றுரிமை"யினை 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை மீள் பதிவு செய்ய வரும்போது, அவர்கள் 6 ஆண்டுகளை கடந்தவராக இருப்பின், அதனை அங்கீகரிக்கவா அல்லது வேண்டாமா என முடிவு செய்வர்.  நம்மவர்கள் பணிபுரியும் நிறுவனம் "சிகப்பு" அந்தஸ்து பெற்றிருப்பின், மேற்கொண்டு சவூதியில்  வசிக்க முடியாது. "மஞ்சள்"நிற அந்தஸ்து பெற்றிருப்பின், "நிடாகத்"தின் விதிகளை நிறைவுச் செய்யும் வரை "சவூதி வசிப்பிடச் சான்றுரிமை"யினை அயலகத் தொழிலாளர்களுக்கு வழங்காது.  "பச்சை" நிற அந்தஸ்து கொண்டவ்ர்களுக்கு எவ்வித சிக்கலுமில்லை. 

இது தவிர, அரசின் பரிந்துரைகளுக்கும் அதிகமாக தன் நாட்டு மக்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு "பிளாட்டினம்" அந்தஸ்தினை உருவாக்கி பல சலுகைகளை வழங்குகின்றது.  இத் திட்டம் குறித்து எழும் ஐயங்களுக்கு விளக்கமளிக்க தொழிலாளர்  அமைச்சகம் தயாராக உள்ளது.

'இகாமா' மீள்பதிவு இல்லையெனில் இங்கு சவூதியில் மேற்கொண்டு வசிக்க இயலாது என்பது மட்டுமல்ல மீறி நாம் இருப்பின் சிறைச்சாலை உறுதி தான். 'இகாமா'வினை மையமாகக் கொண்டு தான் வங்கி கணக்கு, மருத்துவம், காப்பீடு  என அனைத்தையும் செயற்படுத்த இயலும்.

இந்த "நிடாகத்" திட்டம், "சிகப்பு மற்றும் மஞ்சள்" நிற அந்தஸ்து கொண்ட நிறுவனங்களில் பணிபுரிபவ்ர்களுக்கே சிக்கல். இருப்பினும் இதில் ஒரு மகிழ்வுக்குரிய செய்தி என்னவெனில், "சிகப்பு அல்லது மஞ்சள்"  நிற அந்தஸ்து நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் "பச்சை" நிற அந்தஸ்துக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டினால், முன்னாள் நிறுவனத்தின் "பணிக்கான தடையில்லாச் சான்றிதழ்" NOC (No Object Certificate) இன்றியே நேரடியாக அந்நிறுவனத்தில்  சேர இயலும்.  இது வளைகுடாவிலேயே பணி புரிய விழைபவர்களுக்கு ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம்


ஒன்றை நாம் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். என்றிருந்தாலும் நாம் வளைகுடாவிற்கு அந்நியர்கள்! எதுவும் நடக்கலாம்!! எப்போதும் நடக்கலாம்!! "சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?" எனும் உண்மையினை உணர்ந்து மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டால் இது போன்ற அறிவிப்புகள் நம் மனதினைப் பாதிக்க வாய்ப்பில்லை.  மனதளவில் ஊர்ப்பக்கம் செல்ல நினைத்தாலும், பல்வேறு பிணைப்புகளிலும், நிர்ப்பந்தங்களிலும் சிக்குண்டுள்ள நம்மை, இயற்கையே இந்நாட்டின் விதிமுறைகள் மாற்றம் வாயிலாக தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! பக்ரைனிலும், ஏமனிலும் புரட்சி வெடித்திருப்பதால், சவூதியில் எழுந்துள்ள இப் பொறி விரைவில் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு மிகவும் அதிகம்!

குறிப்பு: இவர்கள் நினைப்பது போல் அந்நிய நாட்டினரின் மூளை மற்றும் உடல் உழைப்பினை அவ்வளவு எளிதினில் புறக்கணிக்க இயலாது. அவ்வாறு முனைந்திடின் தற்போதுள்ள இயல்பு வாழ்க்கை தடம்புரண்டுவிடும் எனும் உண்மை இவர்களுக்கும் தெரியும்!
Download As PDF

சனி, 28 மே, 2011

தேர்தலில் மட்டுமல்ல தேர்வினிலும் முதலிடம் மகளீரே!



இது மகளீர்களுக்கான சிறப்புக்காலம் போலும்! அரசியலில்  மட்டுமல்ல அரசுத்தேர்வினிலும், மெட்ரிக் தேர்விலும் முதலிடத்தினை மகளீரே கைப்பற்றியுள்ளனர். தனி நபர் சாதனையாக இன்றி இம்முறை வரலாறுக் காணாத அளவில் முதலிடத்தினை ஐவர் அரசுப் பாடத்திட்டத்தினிலும், மூவர் மெட்ரிக் பாடத்திட்டத்தினிலும் வெற்றியைப் பகிர்ந்துக் கொண்டனர்.

சிறப்பம்சம்சங்கள்:
 
  • இதுவரை இல்லாத சாதனையாக மாநிலம் முழுவதும் முதலிடத்தினை 5 பேரும், இரண்டாவது இடத்தினை 11 பேரும், மூன்றாவது இடத்தினை 24 பேரும் ஆக 40 மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களைப் பகிர்ந்துள்ளனர்.
  • நாற்பது மாணவர்களில் 27 பேர் மாணவிகள். 
  • 5 மாணவர்களைத் தவிர மற்ற 35 மாணவர்களும் சென்னையினைச் சாராதவர்கள். 
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவர்கள் கணிசமான இடம் பெற்றது, தனியார்க் கல்வி தான் சிறந்தக் கல்வி என்ற மாயையினை உடைத்தெறிந்துள்ளது.
  • தேர்வெழுதியவர்கள்: 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 பேர் , வென்றவர்கள்: 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் 
  • தேர்ச்சி விகிதம்...தமிழக அரசுப்பாடத்திட்டம் 85.3%, மெட்ரிக் 95.9%, ஆங்கிலோ-இந்தியன் 95.50%பேரும், ஓ.எஸ்.எல்.சி. 94.4% 
  • நூற்றுக்கு நூறு... கணிதத்தில் 12,532 பேர் - இது கடந்த ஆண்டை (2,399) விட ஏறத்தாழ 5 மடங்கு கூடுதல், அறிவியலில் 3,677 பேர் - இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 மடங்கு கூடுதலாகும். சமூக அறிவியல் பாடத்தில் 756 பேர் சதமடித்துள்ளனர்.
மாணவர்களின் வெற்றிக்கு உழைத்திட்ட ஆசிரியர்களுக்கும், அவர்களது நிர்வாகத்தினருக்கும், கிராம மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரே கல்வி ஆதாரமான அரசுப் பள்ளிகளில் எத்தகைய அரசியிலிற்க்கும் சிக்காது உழைத்திட்ட ஆசிரியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும், தங்கள் மக்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்!
10ம் வகுப்பு: முதல் 3 இடங்களை பிடித்த 40 மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளி விபரம்
 
500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவிகள் விவரம் வருமாறு:


1. எம்.நித்யா, எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

2. எஸ். ரம்யா, ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி செட்டிப்பாளையம்.

3. எஸ்.சங்கீதா, முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.

4. எம்.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.

5. ஆர்.ஹரிணி (496), அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை.



500க்கு 495 மதிப்பெண்கள் பெற்ற 11 மாணவ மாணவிகள் விவரம் வருமாறு:

1. ஏ.சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்.

2. வி.பாக்யஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

3. பி.அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராம், பரமக்குடி.

4. ஜெ.ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்.

5. டி.ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

6. எம்.பொன்மணி, எஸ்.ஆர்.பகத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

7. என்.எம்.கார்த்திக், புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, மதுரை.

8. ஏ.சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்ல பெருமாள்பேட்டை, புதுச்சேரி.

9. வி.சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, சென்னை.

10. எம்.புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை.

11. ஆர்.சுஷ்மிதா, பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை.



500க்கு 494 மதிப்பெண்கள் பெற்ற 24 மாணவ மாணவிகள் விவரம் வருமாறு:

1. நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்.

2. கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்.

3. ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.

4. லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.

5. குங்குமால்யா (494), எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.

6. பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்.

7. எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்.

8. ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்

9. எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்.

10. என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.

11. கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்.

12. கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.

13. என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்.

14. எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

15. எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

16. எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.

17. ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

18. சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.

19. ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்.

20. எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.

21. இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

22. எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.

23. ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை

24. எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை

மாணவசெல்வங்களே.. நீங்கள் வெறும் ஏட்டுச்சுரைக்காயாக, புத்தகப் புழுவாக இன்றி நடைமுறை வாழ்வினில், மற்றும் தேர்ந்தெடுக்கும் துறைகளில் நிபுணத்துவம் பெற வாழ்த்துக்கள்!


நன்றி: தினமணி, நக்கீரன்




Download As PDF