சனி, 4 ஜூன், 2011

கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! - "நிடாகத்"... வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு..



சவூதி அரேபியாவின் நாளிதழில் வந்துள்ள செய்தி இந்நாட்டில் மட்டுமல்ல பெரும்பான்மையான நடுத்தர வர்க்க  வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு "இடி" விழுந்ததுப் போல இருந்தது. ஆம். பணி / தொழில் நிமித்தம் சவூதியினில் தங்கியுள்ள அனைத்து அயல் நாட்டினருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் வசிக்க நீட்டிப்பு தர இயலாது என்ற அமைச்சரின் பேட்டி வெளியானது. நம் மக்களுக்கு அவர்களை அறியாமலேயே, தாம் பீதியடைந்தோ அல்லது மற்றவர்களை பீதியூட்டியோ மகிழ்வதில் அலாதி ஆனந்தம் தான்!  தேவையற்ற குழப்பங்களுடனும், மன உளைச்சல்களுடனும் மின் அஞ்சல் வாயிலாக பரபரத்த நெஞ்சங்களை அமைதிப்படுத்தவே இப்பதிவு.

Ref:http://arabnews.com/saudiarabia/article442386.ece
      http://arabnews.com/saudiarabia/article442386.ece

 

(சவூதி) உள்நாட்டு மக்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தினை நீக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முனைகின்றது. முன்னர், அரசு நிறுவங்களில் "சவூதிமயமாக்கல்" திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட சதவீத மக்கள் அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக இருக்கவேண்டும் என சட்டம் இயற்றி செயற்படுத்தியது. அதோடின்றி, சில துறைகளையும், பதவிகளையும் கட்டாயமாக சவூதியினரே இருக்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது. இதனை தனியார் துறையினிலும் பின்பற்றக் கோரி நீண்ட காலமாக அறிவுறுத்தியது. அவர்களும் முன்னரெல்லாம் பெயரளவில், உரிமையாளரின் உறவினர்களோ அல்லது உயர்பதவியிலுள்ளவர்களின் பரிந்துரையினிலோ மண்ணின் மைந்தர்கள் சிலரை பணிநியமனம் செய்துக் கொள்வர். அப் பணியாளர்களில் பலர் சம்பளத்தேதியன்று மட்டும் வந்து கையெழுத்திட்டு, பணக் கவரைப் பெற்றுக்கொண்டு காணமல் போகின்ற வரலாறும் உண்டு என எனக்கு முன்பிலிருந்தே இருப்பவர்கள் அடிக்கடி நினைவுக் கூர்வதும் உண்டு..

ஆனால் இப்பொழுதெல்லாம் நிலவரம் அப்படியில்லை. கடுமையான, உடல் மற்றும் மூளை உழைப்பிற்கும் குறிப்பிடும் படியான தொகையினில் சவூதியினர் இருக்கின்றனர் என்பதே ஆரோக்கியமான உண்மை! இருப்பினும் இவர்களின் சதவிகிதம் குறைவு என  உள்நாட்டு தொழில் முனைவோர்களே கருதுவதாலும், உள்ளூர் மக்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதியமும் சலுகைகளும் அதிகம் என்பதாலும், உற்பத்தி மற்றும் சேவைகளின் தரத்தினில் குறை நேர்ந்திடக் கூடாது என்பதினாலும் தனியார் துறையினர் பெருமளவில் அயல் நாட்டவரினையே நாடுகின்றனர். குறிப்பாக, இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், சிறீலங்கா.... எனக் குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு வேலையின் தன்மைக்கேற்ப முக்கியத்துவம் தருகின்றனர். (ஒரே பணியினை ஒரு இந்தியரையும், மேற்கத்தியரையும் அமர்த்தினால் நம்மை விட கிட்டதட்ட 3 லிருந்து 6 மடங்கு வரை அதிகமான ஊதியம் அவர்களுக்கு வழங்க வேண்டிவரும். ஏனெனில் அவர்களின் நாணயத்தின் மதிப்பு, சர்வதேசச் சந்தையினில் நம்மை விட அதிகம்.)
 
மலிவான தொகையில் தரமான சேவை கிடைக்கும் போது இங்குள்ளவர்கள் உள்நாட்டு மனித வளத்தைவிட அயல்நாட்டினரையே விரும்புகின்றனர். இங்கு சுமார் 8 1/2 மில்லியன் (85 இலட்சம்) மக்கள் அயல்நாட்டிலிருந்து பணிபுரிபவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் எழுகின்றது. இதனைப் போக்கவே "நிடாகத்" எனும் புதிய திட்டத்தினை உருவாக்கி  விரைவில் செயல் வடிவம் கொடுக்க முனைகின்றனர்.




தன் நாட்டில் தனக்கு வேலை இல்லாது மற்ற நாட்டவ்ர்களுக்கு மட்டும் இடமளித்தால் எந்தவொரு குடிமகனும் கொந்தளிக்கத் தானே செய்வர். அதனை தவிர்க்கவும், வருடத்திற்கு 100 பில்லியன் ரியால்கள் (தோராயமாக 1 ரியால் = 12 ரூபாய்) தன் நாட்டைவிட்டு வெளியேறுவதை இயன்ற அளவிற்க்கு தடுக்கவும் "நிடாகத்" எனும் இத்திட்டத்தினை பயன்படுத்த விழைகின்றனர்.

என்ன தான் கூறுகின்றது இந்த "நிடாகத்"?

ஒரு நிறுவனத்தின் மனிதவளங்களில் எத்தனை உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர் என்பதினைக் கணக்கில் கொண்டு மூன்று வகையாக "சிகப்பு, மஞ்சள் & பச்சை"  என அந்நிறுவனங்களை பிரிக்கின்றனர்..

'சிகப்பு' என்பது அரசு கூறும் நெறிமுறைகளை கண்டுக்கொள்ளாத சவூதி மயமாக்கலில் பங்கேற்காத நிறுவனங்கள்.

'மஞ்சள்' என்பது அரசின் நெறிமுறைகளை நிறைவுச் செய்யாது பகுதி அளவு பின்பற்றும் நிறுவனங்கள்.

'பச்சை' என்பது அரசின் நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுபவர்கள்.

சவூதில் இப்போது நம்மவர்கள் (அவர்களின் பார்வையின் படி நாம் மட்டுமல்ல... அரேபியர்கள் அல்லாத அனைவருமே அயல்நாட்டவர்கள்) பணிபுரியும் நிறுவனங்களின் வண்ணத்தினைப் பொறுத்தே சவூதியில் தொழிலாளிகளின் 'இகாமா' என்கின்ற "சவூதி வசிப்பிட சான்றுரிமை"யினை 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை மீள் பதிவு செய்ய வரும்போது, அவர்கள் 6 ஆண்டுகளை கடந்தவராக இருப்பின், அதனை அங்கீகரிக்கவா அல்லது வேண்டாமா என முடிவு செய்வர்.  நம்மவர்கள் பணிபுரியும் நிறுவனம் "சிகப்பு" அந்தஸ்து பெற்றிருப்பின், மேற்கொண்டு சவூதியில்  வசிக்க முடியாது. "மஞ்சள்"நிற அந்தஸ்து பெற்றிருப்பின், "நிடாகத்"தின் விதிகளை நிறைவுச் செய்யும் வரை "சவூதி வசிப்பிடச் சான்றுரிமை"யினை அயலகத் தொழிலாளர்களுக்கு வழங்காது.  "பச்சை" நிற அந்தஸ்து கொண்டவ்ர்களுக்கு எவ்வித சிக்கலுமில்லை. 

இது தவிர, அரசின் பரிந்துரைகளுக்கும் அதிகமாக தன் நாட்டு மக்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு "பிளாட்டினம்" அந்தஸ்தினை உருவாக்கி பல சலுகைகளை வழங்குகின்றது.  இத் திட்டம் குறித்து எழும் ஐயங்களுக்கு விளக்கமளிக்க தொழிலாளர்  அமைச்சகம் தயாராக உள்ளது.

'இகாமா' மீள்பதிவு இல்லையெனில் இங்கு சவூதியில் மேற்கொண்டு வசிக்க இயலாது என்பது மட்டுமல்ல மீறி நாம் இருப்பின் சிறைச்சாலை உறுதி தான். 'இகாமா'வினை மையமாகக் கொண்டு தான் வங்கி கணக்கு, மருத்துவம், காப்பீடு  என அனைத்தையும் செயற்படுத்த இயலும்.

இந்த "நிடாகத்" திட்டம், "சிகப்பு மற்றும் மஞ்சள்" நிற அந்தஸ்து கொண்ட நிறுவனங்களில் பணிபுரிபவ்ர்களுக்கே சிக்கல். இருப்பினும் இதில் ஒரு மகிழ்வுக்குரிய செய்தி என்னவெனில், "சிகப்பு அல்லது மஞ்சள்"  நிற அந்தஸ்து நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் "பச்சை" நிற அந்தஸ்துக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டினால், முன்னாள் நிறுவனத்தின் "பணிக்கான தடையில்லாச் சான்றிதழ்" NOC (No Object Certificate) இன்றியே நேரடியாக அந்நிறுவனத்தில்  சேர இயலும்.  இது வளைகுடாவிலேயே பணி புரிய விழைபவர்களுக்கு ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம்


ஒன்றை நாம் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். என்றிருந்தாலும் நாம் வளைகுடாவிற்கு அந்நியர்கள்! எதுவும் நடக்கலாம்!! எப்போதும் நடக்கலாம்!! "சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?" எனும் உண்மையினை உணர்ந்து மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டால் இது போன்ற அறிவிப்புகள் நம் மனதினைப் பாதிக்க வாய்ப்பில்லை.  மனதளவில் ஊர்ப்பக்கம் செல்ல நினைத்தாலும், பல்வேறு பிணைப்புகளிலும், நிர்ப்பந்தங்களிலும் சிக்குண்டுள்ள நம்மை, இயற்கையே இந்நாட்டின் விதிமுறைகள் மாற்றம் வாயிலாக தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! பக்ரைனிலும், ஏமனிலும் புரட்சி வெடித்திருப்பதால், சவூதியில் எழுந்துள்ள இப் பொறி விரைவில் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு மிகவும் அதிகம்!

குறிப்பு: இவர்கள் நினைப்பது போல் அந்நிய நாட்டினரின் மூளை மற்றும் உடல் உழைப்பினை அவ்வளவு எளிதினில் புறக்கணிக்க இயலாது. அவ்வாறு முனைந்திடின் தற்போதுள்ள இயல்பு வாழ்க்கை தடம்புரண்டுவிடும் எனும் உண்மை இவர்களுக்கும் தெரியும்!
Download As PDF

1 கருத்து:

AV சொன்னது…

Good explanation dear moorthi keep up!!!!!!!!!!!


AV