சனி, 25 ஜூன், 2011

தமிழகத்திலேயே முதன்முறையாக... ஓ போட வைக்கும் முதல்வர்!


உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக.... என்பது போல் அதென்ன... தமிழகத்திலேயே முதல்முறையாக...? யாரந்த முதல்வர்?!

விழி இருந்தும் மதி மயங்கும் மனிதர்களைத் தான் நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் விழி இழந்தும் விதியினை எண்ணி நொந்துவிடாமல் மதியுடனே சோதனைகளையும் சாதனைகளாக்கிய ஒரு அபூர்வ மனிதரை இப்போது நாம் காண இருக்கின்றோம். திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் புதிய முதல்வராக, ஆங்கில இலக்கியம் படித்த பேராசிரியர் டாக்டர் கே.எம். பிரபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஆமாம் இதிலென்ன சிறப்பு? இவருக்கு மட்டும் ஏனிந்த வரவேற்பு?!

இவர் பள்ளியில் படிக்கும் போதே லேசாக பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு முற்றிலும் பார்வை இழந்து விட்டார். இதனால் அவர் மனம் தளர்ந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். பின்னர் பி.எச்.டி. பட்டம் பெற்றார். சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் அரியானாவில் உள்ள பி.பி.எஸ். கல்லூரிக்கு பணி மாற்றமடைந்தார். அங்கே அவர் ஆங்கில மொழி ஆயவகங்களை அமைத்தார், இதன் மூலம் மாணவர்களை ஆறே மாதங்களில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை வளர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 3G போன்ற நவீனத் தொழிற் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இவரது சிறப்பம்சம். இவருக்குப் பக்கபலமாக இவரது குடும்பத்தினரும், உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் உள்ளமை இவரின் சேவையினை இன்னமும் செம்மை செய்கின்றது.

மீண்டும் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், ஆங்கிலமொழித் துறைத் தலைவராகவும் பொறுப்பேற்றவர், தற்போது திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பதவி உயர்வுப் பெற்று பணி நியமணம் செய்யப்பட்டுள்ளார். உடலில் உள்ள ஊனமெல்லாம் ஒருவரின் உயர்விற்க்கும் வெற்றிக்கும் தடையல்ல என்பதை தன்வாழ்வின் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கும் பேராசிரியர், முனைவர் பிரபு அவர்கள் மென்மேலும் சாதனைகள் பல புரிய வாழ்த்தி மகிழ்வோம்!

ஊனமுற்றோர் எனும் சொல்லொழித்து "மாற்றுத் திறனாளிகள்" எனும் பெயரிட்டு அவர்களுக்கென்று தனித்துறையினை அமைத்தது முந்தைய தி.மு.க. அரசு. இதை விட ஒரு படி மேலே சென்று, ஒரு மாற்றுத்திறனாளிக்கு பதவி உயர்வளித்து அதனை உயிர்ப்பிக்கின்றது இன்றைய அ.தி.மு.க அரசு. இச் செயலிற்க்காக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வோம்!
 
 
குறிப்பு: தன் பணிப்பளுவிற்க்கு இடையினிலும், தான் அறிந்த இச் செய்தினை மறவாமல் எனக்குத் தெரியப்படுத்தி வலைப்பூவில் பதிவிட வித்திட்ட  நண்பர் திரு. இராஜா அவர்களுக்கு நன்றி!
Download As PDF

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் சபாஷ் என்னுடையது...

suvanappiriyan சொன்னது…

சிறந்த உதாரண புருஷர். வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இச் செயலிற்க்காக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வோம்!//
வாழ்த்துக்கள்.