விழித்திருக்கும் போதே உறங்க முயலாதீர்! வெளிச்சத்திற்கு வந்தது இது ஒன்று தான். இது போல எத்தனையோ?!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சார்பில், "பாதுகாப்பு மற்றும் மேம்பாடு' குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ந்தேதி நடந்தது. அக்கருத்தரங்கில் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் தனது (இந்திய நாட்டின்) உரைக்குப் பதிலாக தவறுதலாக போர்ச்சுகல் நாட்டின் உரையினை வாசித்துள்ளார். இதைக் கண்டு பிடிக்கவே நமது அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் 3 நிமிடங்கள் ஆகிவிட்டன. தான் என்ன வாசிக்க இருக்கின்றோம் என்பதினை அறியாமலேயே ஒரு நாட்டின் மிக முக்கிய பொருப்பிலுள்ள அமைச்சர்கள் இருக்கின்றனர் என்பதை இச்சம்பவம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
அதுசரி... போர்ச்சுகல் நாட்டின் உரை எப்படி இவர் கரங்களிற்க்கு வந்தது? அரசு அதிகாரிகளின் கரங்களில் தான் அனைத்துமே உள்ளது. நம் அமைச்சர்கள் பெரும்பாலோர் ஏதோ சம்பிராதயமாக செயல்படுவதினால் தான் உலக அரங்கில் நாம் கூனிக் குறுக வேண்டியுள்ளது!
சற்றே சிந்தித்துப்பாருங்கள், நம் ஈழத்தமிழர்களின் அவல நிலையினை! இதிலிருந்து நாம் அறிவதென்ன? மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்கள் தான் புரியும் செயல் என்ன; அதன் விளைவுகள் என்ன என உணர்ந்துச் செய்திருப்பார்களேயானால் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தினைத் தவிர்த்திருக்கக் கூடும். அதோடு இலங்கையில் சீனர்களின் அதிகாரபூர்வ நடமாட்டத்தினையும், லஷ்கர்-தொய்பா தீவிரவாதிகளின் வளர்ச்சியினையும் அடியோடு தவிர்த்திருக்கக் கூடும். இனியேனும் விழித்திருக்கும் போதே உறங்க முயலாதீர்கள்!
குறிப்பு: நமது நோக்கம் பிழை கூறுவது அல்ல. மீண்டும் இது போன்று தவறு நிகழ்ந்திடக் கூடாது என்பதே எம்போன்ற குடிமகன்களின் கவலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக