செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே!?


மட்டைப் பந்தாட்டத்தைக் காண நேரமிருந்த இவருக்கு வாக்களிக்க நேரமில்லை என்பதை காதில் பூ வைத்த மடையர்களும் கூட நம்ப மறுப்பார்கள்!  மெத்த படித்தவர்கள், அறிவாளிகள் என மற்றவர்களாலோ அல்லது தங்களைத் தாங்களாகவே மெச்சிக்கொள்பவர்களில் பலர் வாய்கிழிய பேசுவரே தவிர வாக்களிக்க முன்வருவதில்லை. அதற்கு நம் பிரதமரும் விதி விலக்கல்ல என்பது ஒரு அதிர்ச்சியான விஷயமே!

"இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" எனப் பொறுப்பின்றி திரியாதே! மறவாமல் வாக்களி!! என்று அங்கலாய்க்காத அரசியற்கட்சிகளோ அல்லது ஜனநாயக விரும்பிகளோ குறைவில்லை.



தேர்தல் நேரத்தில் ஓவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்கும் கடமையை செய்ய வேண்டும் எனவும், "49 ஓ" இருக்கும் போது எந்த வாக்காளரையும் தேர்வு செய்ய விரும்பாத பட்சத்தில் அதனை உபயோகிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் மக்களிடம் மன்றாடுகின்றது. ஊடகங்களும், வாக்களிக்காத அல்லது விரும்பாதவர்களை கடுமையாக "ரியாலிடி ஷோ, விவாத மேடை, தலையங்கம், அரசியல் களம்..." என்பது போன்ற நிகழ்ச்சியின் வாயிலாக சாடவும் செய்கின்றது. ஆனால்... நடப்பது என்ன? இந்நேரம்.காம் வாயிலாக நாம் அறிகின்ற செய்தி இது...  (Ref: http://www.inneram.com/2011041115448/manmohan-singh-didnt-cast-his-vote-in-assam-election-best-example)


கடந்த 20 ஆண்டுகளாக அசாமில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போதிலிருந்து அவர் அசாமில் வாக்காளராக இருந்து வருகிறார்.  திஸ்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 175-ல் வாக்காளர் பட்டியலில் 721-வது பெயராக மன்மோகன் சிங்கின் பெயர் உள்ளது. அசாம் முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியாவின் மனைவியும், அசாம் முன்னாள் அமைச்சருமான ஹேமோபிரவா சைகியாவின் வீட்டில்தான் மன்மோகன் சிங் வாடகைக்கு இருப்பதாக பதிவாகி உள்ளது.  திஸ்பூர் தொகுதிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் அவரது வாக்கைப் பதிவு செய்யவில்லை என அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியான ஜே.பாலாஜி தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மன்மோகன் சிங் வாக்களிக்கவில்லை. ஆனால் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மன்மோகன் வாக்களித்தார்.



ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே!?  பாராளுமன்றத்திற்கோ அல்லது சட்டசபைக்கோ தேர்தலுக்காகவது முறையாக மக்களை நேரடியாக சந்தித்திருந்தால் தானே அதன் மகிமைப் புரியும். அது சரி..! இதைப்பற்றி எல்லாம் சோனியாஜி அல்லவா கவலைப்பட வேண்டும்?!



Download As PDF

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியவை...


நிழற்படத்தினைப் பாருங்கள்! இறந்தபின்பும் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவைப் போல மீண்டும் அவர்கள் தேசத்தினை உயிர்த்தெழ முயல்வதினை.

நிலநடுக்கத்தால், குறுக்கும் நெடுக்குமாக பிளந்திருந்த சாலையை, குற்றுயிரும் குலையுயிருமாய் சரிந்திருந்த சாலையை, மார்ச் 17ந்தேதி ஆரம்பித்து, ஆறு நாட்களுக்குள் பிளவுகளை, ச்ரிவுகளை,  ஆழ்குழிகளை சரி செய்ததோடின்றி போக்குவரத்தையும் மீண்டும் அந்த சாலையிலே ஏற்படுத்திய விதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவை மட்டுமல்ல ஒவ்வொரு ஜப்பானியக் குடிமகனும் இந்த நெருக்கடியான காலக் கட்டத்தினில் நடந்துக்கொண்ட விதம் நம்மை நெகிழ வைப்பதோடின்றி அவர்களிடம் நாம் கற்கவேண்டியதென்ன என்பதினையும் உணர வைக்கின்றது. 


நம்மவர்களைப்போல சோர்ந்து விடாமல், அதே நேரத்தில் 'எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்' என்கின்ற தற்குறி நோக்குடனும் இல்லாமல், தனது மனமுதிர்வை, வாழும் பண்பை, தனித்துவத்தை ஜப்பானியர்கள் உலகிற்கு உணர்த்தி நமக்கு வியப்பேற்றியுள்ளனர்.

பதற்றமின்மை: இழந்த வருத்தமும், சோகம் அப்பிய முகங்களையும் தான் காண முடிந்ததேயன்றி நம்மவர்களைப் போல நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவதையோ அல்லது ஒப்பாரிவைப்பது போலவோ ஒரு காட்சியைக் கூட காண முடியவில்லை.

கண்ணியம்: குடிநீருக்காகவும், பொருட்களுக்காகவும் சீராக, ஒழுங்காக வரிசையில் நின்று பொருட்களை வாங்கியதக்காணலாம். (முண்டியடித்துக் கொண்டோ அல்லது ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டோ, "எனக்கு கிடைக்கவில்லையே" என வசை மாறி பொழிந்துக் கொள்ளவில்லை).

திறன் : நம்ப முடியாத கட்டிட கட்டமைப்பு. கட்டிடங்கள் கொஞ்சம் ஆட்டங்கண்டாலும், அது அப்படியே நிலைகுலைந்து சரியாமல் இருந்த நிலை அவர்களின் கட்டிடக் கலை விற்பன்னத்தை / நிபுணத்துவத்தைக் காணமுடிகின்றது. நம் ஊரிலோ... மறுபாதி கட்டிக் கொண்டிருககும் பொழுதே, முன் பாதி இடிந்து விழும் அபாயத்தில் தான் நம் காண்டிராக்டர்கள் நடந்து கொள்கிறார்கள். (நம்மவர்கள் அனைவரையும் அப்படிக் குறைத்துக் கூறுவதற்கில்லை).


நல்லெண்ணம்: எது அன்றையத் தேவையோ, அதை மட்டுமே வாங்கியது. இதன் மூலம், மற்றவர்களுக்கும் கிடைக்க ஏதுவாய் அமைந்தது. பதுக்கல்/கள்ள மார்க்கெட்டில் விலை உயர்த்தி விற்பது போன்ற செயல்கள் நடைபெறவில்லை.

ஒழுங்கு: சந்தடி சாக்கில், குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சூறையாடலோ, கொள்ளையடித்தலோ நடக்கவில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் கூட கடுமையான போக்குவரத்து நெரிசலிலும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லாமல் சூழலைப் புரிந்துக் கொண்டு அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொண்டனர்.


தியாகம்: முடிவு எப்படியும் இருக்கலாம் என்றறிந்த பின்பும் சிறிதும் சுணக்கமின்றி 50 ஊழியர்கள் அணு உலை இடத்திலேயே தங்கியிருந்து, உலைகளை குளிர்விப்பதற்காக, கடல் தண்ணீரை வாரி இறைக்கும் பணியில் அர்ப்பணித்துக்கொண்டது.
பரிவு: ஜப்பானிய உணவகங்கள் தங்களின் உணவுகளின் விலையை வழக்கத்திற்கு மாறாக இயல்பான விலையிலிருந்துக் குறைத்துக் கொண்டன. ஏ.டி.எம்(தானியங்கி பண பட்டுவாடா கருவி) எந்த வித பாதுகாப்புமின்றி, தனித்து விடப்பட்ட நிலையிலும் பாதுகாப்பாக இருந்தது. பலம் வாய்ந்தவர்கள், பலவீனர்களை ஆதரவாய் கவனித்து கொண்டனர். (இந்தியாவில் இதே போல் குஜராத் அகமதாபாத் நகரில் நிகழ்ந்த கொடுமையான நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முனைந்தவர்களை விட அவர்களின் பொருட்களைச் சூறையாடவே மாநிலங்கடந்து கொள்ளையர்களும், திருடர்களும் முயன்றனர்; அவர்களைக் கண்டதும் சுடுவதற்கு அம் மாநில அரசு உத்தரவிட்டது என்பது வரலாறு.)

பயிற்சி: சிறியவர் முதல் பெரியோர் வரை இது போன்ற இடர்பாடான நேரங்களில் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என அரசு முன் கூட்டியே தன் மக்களுக்கு பயிற்சி அளித்திருந்தது. அதனை அனைவரும் பின்பற்றியதால் கலக்கமோ குழப்பமோ இன்றி தெளிவுடன் இயற்கையின் சீற்றத்தினை எதிர்க்கொண்டனர். (நம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய திட்டமிட்ட ஒத்திகையினிலேயே சில பயணிகள் ஊர்தி பழுதடைந்து சொதப்பியது என்பது செய்தி. இதன் மூலமாக நம் இந்திய / தமிழக அரசும் மக்களும் எவ்வித விழிப்புணர்வில் இருந்தனர் இன்னமும் இருக்கின்றனர் என்பது வேதனையான கண்கூடு.)

ஊடகங்களின் வெளிப்பாடு (வானொலி / தொலைக்காட்சி / இதழ்கள்): இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக என்றெல்லாம் பீற்றிக்கொள்ளாமல் ஜப்பானிய ஊடகங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் மிகைப்படுத்தாமல், பொதுமக்களை பீதியூட்டாமல் பக்குவமாக நடந்துக்கொண்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தீவிரவாதிகளின் முற்றுகைக்கு ஆளான மும்பை தாஜ் ஹோட்டலினை மீட்க நம் இராணுவத்தினர் எங்கெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றனர், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றனர் என்பதை பொதுமக்களுக்கு நேரலையாகத் தெரிவிப்பதாகக் கருதி தீவிரவாதிகளுக்கு வழிகாட்டியதை போன்றதோர் கொடுமை ஜப்பானில் அறவே கிடையவே கிடையாது.

நற்பண்பு (மனசாட்சிக்கு கட்டுபடுதல்): வணிகவளாகத்தினிலோ அல்லது பிற இடங்களிலோ, திடிரென தோன்றுகின்ற மின்வெட்டு நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக்கொள்ளும் மனப்பான்மையுடன் இன்றி, எடுத்தப் பொருட்களை அதே இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் மின்சாரம் வரும் வரை அமைதிக் காத்தனர்.


நன்றி: மின் அஞ்சல் வாயிலாக ஜப்பான் தொடர்பாக பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! (Photos: National Geography & other websites)
Download As PDF